வங்கக்கடலில் ‘நிவர்’ புயல் எதிரொலி: நாகையில் கடல் சீற்றம்; 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைப்பு
வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் எதிரொலியாக நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளை(புதன்கிழமை) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் கன மழை பெய்யும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது.
இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கடுவையாற்று பகுதியில் மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று காலை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடும் சிரமத்துடன் கரை திரும்பி வருகின்றனர்.
‘நிவர்’ புயலையொட்டி நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று காலை 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் கரையை கடக்கும் போது கன மழை மற்றும் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோர மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். கூரை வீட்டில் தார்பாய்கள் போடுவது, ஓட்டு வீடுகளில் பாதுகாப்பாக இருக்க ஓடுகளை பிரிப்பது, புயலில் சிக்கி சாயாமல் இருக்க தென்னை மரங்களில் மட்டைகள் மற்றும் ஓலைகளை வெட்டுவது போன்ற முன்னெச்சரிக்கை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.