கரூரில் பரபரப்பு: பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
கரூரில் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, சாதி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்-வெண்ணிலா தம்பதியின் மகள் பவித்ரா (வயது 22). இவருக்கும், கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பிரகாஷ்குமார் (28) என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. பிரகாஷ்குமார் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவியும் வாங்கல் பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் திருமணத்தின்போது, பவித்ராவின் பெற்றோர் பிரகாஷ்குமாருக்கு, 40 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ்குமார் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டினுள் பவித்ரா தூக்கில் தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்குமார் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பவித்ராவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் அவர்கள், பவித்ராவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கரூர் காந்திகிராமத்தில் உள்ள கரூர்-திருச்சி மெயின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ்ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பவித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கோட்டாட்சியரின் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாமோதர அள்ளி ஊராட்சி மன்றத்தலைவராக பவித்திராவின் தாய் வெண்ணிலா உள்ளது குறிப்பிடத்தக்கது.