லெப்பைக்குடிகாட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

லெப்பைக்குடிகாட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-11-23 06:00 GMT
மங்களமேடு, 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை கிராமத்தை தேர்ந்தவர்கள் ஜெயச்சந்திரன் மகன் அரவிந்த்(வயது 24), ஆறுமுகம் மகன் அரவிந்த்(23), முனியசாமி மகன் முத்துக்குமார்(18). இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆடுதுறை பகுதியில் இருந்து திருமாந்துறைக்கு சென்று கொண்டிருந்தனர். லெப்பைக்குடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, திருமாந்துறை நோவா நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரஞ்சித்குமார்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அரவிந்த் உள்ளிட்ட 3 பேரும் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் மகன் அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரஞ்சித்குமார் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்