மனஉளைச்சல் காரணமாக விஷம் தின்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு

தஞ்சை மாவட்டத்தில் மனஉளைச்சல் காரணமாக விஷம் தின்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2020-11-23 07:00 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் தினேஷ்குமார்(வயது 40). இவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இவர் மெலட்டூர் ஆபிரகாம்தெருவில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி தினேஷ்குமார் எலிமருந்தை(விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்றுஇரவு 8.40 மணிக்கு தினேஷ்குமார் இறந்தார்.

இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தினேஷ்குமார் முன்பு திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இவர் மீது ஒருவர் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் நேரில் ஆஜராக வேண்டும் என இவருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினேஷ்குமார் கடந்த 2011-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார். ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவிட்டு திருச்சி மத்திய மண்டலத்தில் தஞ்சை சரகத்துக்கு மாறுதலாகி வந்த பிறகும், பழைய பிரச்சினைகள் தொடர்ந்ததால் மனஉளைச்சலில் தினேஷ்குமார் தற்கொலை செய்தது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்