மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் - கலெக்டர் கார்த்திகா நேரில் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் 856 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-11-23 04:12 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் 856 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சியினர் 18 வயது நிரம்பிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் முகாம்களில் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதிகோண்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பழைய தர்மபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்களை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் தணிகாசலம், தாசில்தார் ரமேஷ், தலைமை ஆசிரியைகள் தெரசாள், கவிதா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது.

கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 856 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக 13.12.2020 வரை வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பொதுமக்கள் தங்களது பதிவுகளை சரிபார்த்து கொள்ளலாம். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்த மாதம் 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று ஒருவர் இடம் பெயர்ந்து இருந்தாலோ, இறந்து போயிருந்தாலோ படிவம் 7-ஐ கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம். ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனில் படிவம் 8-லும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-விலும் விண்ணப்பிக்கலாம். தற்போது பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை என்பதால் 18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அரூர் உதவி கலெக்டர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மொரப்பூர் ஒன்றியம் தாசரஅள்ளி ஊராட்சிக்கு சென்று வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரூர் தாசில்தார் செல்வகுமார், தேர்தல் துணை தாசில்தார் செங்கோட்டையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாராணி உலகநாதன், தமிழ்ச்செல்வி ரங்கநாதன், துணைத்தலைவர்கள் வினோதா ராஜா, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் விஜயன், ஊராட்சி செயலாளர் ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்