கோத்தகிரி அருகே 15 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது டிரைவர் உயிருடன் மீட்பு
கோத்தகிரி அருகே 15 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. அதற்குள் சிக்கிய டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கெரடா பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக ஊட்டிக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது வீட்டிற்கு ஜீப்பில் திரும்பினார். ஜீப்பை அவரே ஓட்டி வந்தார்.
அவர் வந்த ஜீப் கெரடா சாலையில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென காட்டெருமை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காட்டெருமை மீது மோதாமல் இருக்க தனது ஜீப்பை திருப்பினார். அப்போது அந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
பின்னர் பக்கவாட்டில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் ஜீப்புக்குள் சிக்கிக்கொண்ட அவரால் வெளியே வர முடியவில்லை. உடனே அவர் இது குறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நிலைய அதிகாரி பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் ஜீப்புக்குள் சிக்கிய வினோத்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவருடைய கை ஜீப்புக்குள் சிக்கிக்கொண்டதாலும், செஙகுத்தான பள்ளமாக இருந்ததாலும் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், கயிறு கட்டி வினோத்குமாரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.