டெல்லியில் வழிபாட்டு தலங்கள் மீண்டும் மூடப்பட்டது ஏன்? மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் சிந்திக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கருத்து
டெல்லியில் வழிபாட்டு தலங்கள் மீண்டும் மூடப்பட்டது ஏன்? என மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய பா.ஜனதா கட்சியை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தற்கு அரசின் அதீத நம்பிக்கையே காரணம். மார்க்கெட்டுகள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. ஏன் இது நடந்து உள்ளது என மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் மகா விகாஸ் அகாடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்க்க வேண்டும் என எதிர்த்து வருகின்றனர்.
மராட்டியத்தில் சாத் பூஜை கொண்டாட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என பா.ஜனதா தலைவர் போராட்டம் நடத்தினார். நீங்கள் பீகார் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். அதற்காக மும்பையில் உள்ள பீகார் மக்களை சர்ச்சையில் இழுத்துவிட வேண்டிய அவசியம் இல்லை.
பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் பொது இடங்களில் சாத் பூஜை கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மராட்டியத்தில் அந்த கட்சியினர் அனுமதி கேட்கின்றனர். மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என பா.ஜனதா மாநில அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் விமர்சிக்க விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.