தினமும் 25 லட்சம் பேர் பயணிக்க வசதி: மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப்பணிகள் 2026-ம் ஆண்டு நிறைவடையும் - 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்த திட்டம்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி 2026-ம் ஆண்டு நிறைவடையும். 173 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும் ரெயில்கள் மூலம் தினமும் 25 லட்சம் பயணிகள் பயணிக்க முடியும். இந்த பணியில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2 பாதைகளில் 45 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களை இயக்கி வருகிறது. இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 3 பாதைகளில் ரெயில் போக்குவரத்துக்கான பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான தொடக்க விழா, சென்னை, வில்லிவாக்கம், ராஜாஜி நகர், வெங்கடராகவலு தெருவில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் நிலையத்தில் நேற்று நடந்தது. இதற்காக அங்கு தனியாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதிப் யாதவ், சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்தக் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த விழாவில், காணொலி காட்சி மூலம், மத்திய மந்திரி அமித்ஷா, சுரங்கப்பாதையில் ரெயில் நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். வில்லிவாக்கத்தில் தயார் நிலையில் இருந்த பொக்லைன் எந்திரம் சுரங்கத்துக்கான குழியை தோண்டி பணியை தொடங்கியது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் சேவைக் காக 2-ம் கட்டமாக அமைக்கப்படும் 3 திட்டம் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரம் கொண்ட பாதை அமைக்கப்படுகிறது. இதில் 128 ரெயில் நிலையங்களும், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் ரெயில்களை பராமரிக்கும் பணிமனைகளும் அமைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மாதவரம் பால்பண்ணை முதல் சிப்காட் வரை உள்ள 3-வது வழித்தடம் 45.8 கி.மீ. நீளத்தில் வடக்கு தெற்கு வழித்தடமாகும். இது தகவல் தொழில்நுட்ப வழித்தடம், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கிறது. இந்தப்பாதையில் சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 4-வது வழித்தடம் 26.1 கி.மீ. நீளத்திற்கு கிழக்கு மேற்கு வழித்தடமாக அமைகிறது. நகரத்தின் வணிகப்பகுதிகளான நந்தனம், தியாகராயநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லியை இணைக்கிறது. இதில் உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 12 ரெயில் நிலையங்களும் அமைகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. நீளத்தில் சுற்று வட்ட வழித்தடம் அமைகிறது. வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. இதில் உயர்த்தப்பட்ட பாதையில் 42 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 6 ரெயில் நிலையங்களும் வர உள்ளன.
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை உள்ள 9.051 கி.மீ. தூர விரிவாக்கப்பணிகள் அடுத்த ஆண்டு (2021) இறுதியில் போக்குவரத்துக்காக திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளில் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டு நிறைவடையும். அதற்கு பிறகு தற்போது உள்ள 45 கி.மீ. தூரத்தையும் சேர்த்து மொத்தம் 173 கி.மீ. தூரத்திற்கு ரெயில் இயக்கப்படும். இவற்றின் மூலம் தினமும் 25 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணிக்க முடியும். பொதுபோக்குவரத்து பயணங்களில் 25 சதவீதம் அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.