கொலை வழக்கில் கைதானவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதானவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ். இவர் ஒரு கொலை வழக்கில் சிப்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோன்று கோவில்பட்டி திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்க்காவலன் மற்றும் அவருடைய மகன் பசுபதிபாண்டியன் ஆகியோர் கயத்தாறு பஜார் பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கியதாக, கயத்தாறு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பேரூரணியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுந்தர்ராஜ், ஊர்க்காவலன், பசுபதி பாண்டியன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை பாளையங்கோட்டை மற்றும் பேரூரணி சிறைகளில் போலீசார் சமர்ப்பித்தனர்.