மின் கட்டண தள்ளுபடி வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மின் கட்டண தள்ளுபடி வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
நாக்பூர்,
மராட்டியத்தில் ஊரடங்கு காலத்தில் நுகர்வோருக்கு அதிக மின்கட்டணம் வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜனதா வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் சமீபத்தில் அளித்த பேட்டியில், “மாநில மின் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளது. முந்தைய பாரதீய ஜனதா அரசால் உருக்கப்பட்ட குழப்பங்களே இதற்கு காரணம். எனவே மின் கட்டணத்தில் அரசால் எந்த ஒரு தளர்வையும் வழங்க முடியாது. மக்கள் கட்டணத்தை முழுமையாக செலுத்தவேண்டும்“ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை
இந்த மாத தொடக்கத்தில் அதிக மின்கட்டணம் செலுத்திய நுகர்வோர்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கப்படும், அவர்களுக்கு தீபாவளி பரிசாக அது அமையும் என மின்சார மந்திரி நிதின் ராவத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது சாத்தியமற்றது என இந்த அரசு உணர்ந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
கடந்த பாரதீய ஜனதா ஆட்சியில் சந்திரசேகர் பவன்குலே மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, அரசால் நடத்தப்படும் 3 மின் நிறுவனங்களும் மிகக்சிறந்த முறையில் செயல்பட்டன.
நாங்கள் மிகவும் மலிவான விலையில் மின்சாரம் வாங்கினோம். எங்கள் ஆட்சியின் போது ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் நாங்கள் மின் கட்டண சலுகைகளை வழங்கினோம். உங்களுக்கு (அரசுக்கு) தைரியம் இருந்தால், நீங்களும் அதைச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.