சின்னமனூரில் அதிரடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு - போலீசார் சோதனை ரூ.1¾ லட்சம் சிக்கியது
சின்னமனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது.;
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, ஓடைப்பட்டி, குச்சனூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் சொத்து பத்திரங்கள் பதிவு, சொத்துகள் மீதான வில்லங்கத்தை தெரிந்து கொள்ளுதல் மற்றும் திருமண பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து நேற்று அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கீதா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தாஜுதீன், துணை ஆய்வுக்குழு அலுவலர் திருமலை மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும் அங்குள்ள முக்கிய ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனை நேற்று நள்ளிரவுக்கும் மேலாக நீடித்தது.
தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனை பொதுமக்களிடையே பரபரப்பையும், அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.