ராசிபுரம் அருகே பரபரப்பு: பேய் விரட்டுவதாக கூறி சிறுமிகள் பலாத்காரம் - போலி மந்திரவாதி போக்சோவில் கைது
ராசிபுரம் அருகே பேய் விரட்டுவதாக கூறி அக்காள்-தங்கைகளான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலி மந்திரவாதி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பொன்னாரம்பட்டி பறவைக்காடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி, சேலம் இரும்பாலை அருகே சுக்கம்பட்டியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு 15 வயதிலும், 13 வயதிலும் மகள்கள் உள்ளனர். இவர்களும் தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், 2 சிறுமிகளும் பித்து பிடித்தது போல் இருந்ததாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசாமல் ஒரு வித பதற்றத்தில் சிறுமிகள் காணப்பட்டதாக தெரிகிறது. மகள்களின் நிலையை அறிந்த பெற்றோர் பல்வேறு சாமியார்கள், மந்திரவாதிகளிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து சென்றார்களாம். ஆனால் சிறுமிகளுக்கு குணம் அடையவில்லை.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த மந்திரவாதி சேகர் (வயது 50) என்பவரிடம் கடந்த மாதம் சிறுமிகளுக்கு பேய் விரட்டுவதற்காக பெற்றோர் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது சேகர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து பேய் விரட்ட வேண்டும் என்றும், அதற்காக சிறுமிகள் இங்கு தங்கி இருக்க வேண்டும் என்றும் கூறினாராம்.
இதனை நம்பிய பெற்றோர் சிறுமிகளை சேகர் வீட்டில் விட்டு சென்றதாக தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சேகர், பேய் விரட்டுவதாக கூறி சிறுமிகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சில நாட்கள் பெற்றோரிடம் கூறாமல் பயந்து இருந்த சிறுமிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் மந்திரவாதி சேகர் மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி விசாரணை நடத்தியதில் சேகர் போலி மந்திரவாதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து பேய் விரட்டுவதாக கூறி சிறுமிகளுக்கு பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி சேகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.