மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் உதவித்தொகையை அரசு உயர்த்தி வழங்க கோரிக்கை

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு உதவித்தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-11-18 16:54 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தெலுங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசு துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து, 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 3 மாதங்களில் வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும். தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளை அலட்சியம் செய்வது, அலைக்கழிக்கும் போக்கு ஆகியவை களையப்பட வேண்டும். செவித்திறன் பாதிப்பு, முதுகுத்தண்டுவட பாதித்தவர்களை அவமரியாதை செய்வது மற்றும் உதவி தொகை வழங்குவதற்கு மறுக்கும் போக்கு, மாற்றுத்திறனாளிகளை அலைய வைக்கும் போக்கு ஆகியவை களையப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொட்டும் மழையில்...

கொட்டு மழையில் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரத் தலைவர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் பி.முத்துமாலை, எஸ்.கண்ணன், எல்.ஈஸ்வரி, முகமது சாலிஹாபுரம் செயலாளர் மாமுது மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து வடக்கு திட்டங்குளம், துரைச்சாமிபுரம் செண்பகபேரி, கிழவிபட்டி, வானரமுட்டி, வில்லிசேரி, குமரெட்டியபுரம், முகமதுசாலிஹாபுரம், கீழ பாண்டவர்மங்கலம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்