வேப்பந்தட்டை பகுதியில் மழை: 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது - மின்னல் தாக்கி மாடு சாவு

வேப்பந்தட்டை பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், 2 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மின்னல் தாக்கி மாடு செத்தது.

Update: 2020-11-18 13:30 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் ஸ்ரீரங்காயி(வயது 60). இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் வேப்பந்தட்டையை சேர்ந்தவர் அழகுதுரை (50). இவருக்கு சொந்தமான கூரை வீட்டின் சுவர் திடீரென இடிந்து கீழே விழுந்து சேதமடைந்துள்ளது.

மேலும் வேப்பந்தட்டையை அடுத்த தாழை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(48). இவருக்கு வெங்கலம் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நேற்று பசுமாட்டை ஓட்டிச்சென்று மரத்தடியில் கட்டி வைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கி, மாடு சம்பவ இடத்திலேயே செத்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வெங்கலம் வருவாய் ஆய்வாளர் கவுரி கணக்கீடு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஒரு சில ஊர்களில் தடுப்பணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக அரும்பாவூர் பெரிய ஏரி இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்