வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில தலைவர் உள்பட 2 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை

திருவண்ணாமலையில் வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க.மாநில தலைவர் உள்பட 2 ஆயிரம் பேர் கைதாகி விடுதலையாயினர்.

Update: 2020-11-18 08:45 GMT
திருவண்ணாமலை,

பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை கடந்த 6-ந் தேதி திருத்தணியில் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த யாத்திரை நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

யாத்திரையை முன்னிட்டு திருவண்ணாமலை நகர எல்லை தொடங்கி நகர் முழுவதும் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு பா.ஜ.க. கொடி கம்பங்கள் நட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்து இருந்ததால் திருவண்ணாமலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, ஒரு உதவி போலீஸ் சூப்பிரண்டு, 12 துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை போலீசார் என 1,195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் மதியம் சுமார் 3.40 மணியளவில் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். பின்னர் 300 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வர, அவர் அங்கிருந்து காரில் மத்திய பஸ் நிலையம், சின்ன கடை வீதி, காந்தி சிலை வழியாக அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த யாத்திரை பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அவருக்கு விழா மேடை அருகில் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் தலைமையில் மேளதாளத்துடனும், பூரணகும்ப மரியாதையுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் எல்.முருகனுக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 150 கலைஞர்கள் கொண்டு கலை நிகழ்ச்சிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசாருக்கு அதற்கு தடை விதித்ததால் ஒருசில கலைஞர்கள் மூலம் மேடை மற்றும் மேடை அருகிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் சுமார் 1,500 பேர் காவி உடையில் வேல் ஏந்தி வந்து கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் எல்.முருகன், பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ். தணிகைவேல், ஓ.பி.சி. அணி மாநிலத் துதணைத் தலைவர் சி.ஏழுமலை, மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் அருணை ஆனந்தன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எஸ்.வினோத்கண்ணா, தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் இ.நடராஜன், நிர்வாகி பி.ஆர்.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் புகழ்.மூவேந்தன், மாவட்ட செயலாளர் ஜி.அஜித்குமார், வழக்கறிஞர்கள் அணி மாவட்டத் தலைவர் கே.ஆர்.குமார், எஸ்.டி. பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.விஜயராஜ், வக்கீல் வி.சாந்தகுமார், சிறுபான்மையினர் அணி மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ஷான்வாஸ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர்கள் ஏ.ஆர்.விஜய், கே.வினோத்குமார், வி.செந்தில்குமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், நேதாஜி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என சுமார் 2000 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்