சிங்காரப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
சிங்காரப்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உரிய விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
ஊத்தங்கரை,
சிங்காரப்பேட்டை அருகே உள்ள அத்திப்பாடியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் உதயநிலா (வயது 20). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாதேஷ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாதேஷ், உதயநிலாவின் தாயாரை தொடர்பு கொண்டு உதயநிலாவை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர், அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது உதயநிலா தனது தாயாரிடம், கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அடிக்கடி தகராறு செய்வதாகவும் கூறி அழுதுள்ளார். அவரை பெற்றோர் சமாதானம் செய்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் உதயநிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு உதயநிலாவின் உறவினர்கள் திரண்டு விசாரணையை துரிதப்படுத்த கோரியும், உதயநிலாவின் கணவர் மாதேசை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இளம்பெண் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.