மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கெடிலம் ஆற்றில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் - பண்ருட்டி அருகே பரபரப்பு
பண்ருட்டி அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கெடிலம் ஆற்றில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு கிராமம் வழியாக கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பணை கட்டும் இடத்தின் அருகில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
இது பற்றி அறிந்ததும் நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன் ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நேற்று காலை ஒன்று திரண்டு கெடிலம் ஆற்றுக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டது. இதனால் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இங்கு மணல் குவாரி அமைந்தால் நீர்மட்டம் மேலும் குறைந்து விடும். எனவே இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றனர்.
அதற்கு தாசில்தார் பிரகாஷ், இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதன்பிறகே மணல் குவாரி அமைக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதுவரை குவாரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.