நகை வாங்குவது போல் நடித்து தங்கசங்கிலி திருடிய தம்பதி கைது

கோவையில் நகை வாங்குவது போல் நடித்து தங்கசங்கிலி திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2020-11-18 03:48 GMT
கோவை,

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பவிழம் ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இங்கு, கடந்த 15-ந் தேதி 35 வயது மதிக்கத் தக்க ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் வந்தனர். அவர்கள், கடையில் இருந்த ஊழியரிடம் கேரள மாநில மாடல் செயின் வேண்டும் என்று கேட்டனர். அது போன்ற நகைகளை கடை ஊழியரும் எடுத்து காண்பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அந்த ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, 4 பவுன்தங்கசங்கிலியை அந்த ஆணும், பெண்ணும் நைசாக திருடினர்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு நகை பிடிக்க வில்லை என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து கடை ஊழியர், நகைகளை சரி பார்த்தார். இதில், 4 பவுன் கேரள மாநில மாடல் நகை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், அந்த ஆணும், பெண்ணும் கடை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி 4 பவுன் நகையை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

உடனே கடை ஊழியர்கள் வேகமாக வெளியே வந்த அந்த ஜோடியை தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள கார் நிறுத்தம் அருகே அவர்கள் 2 பேரும் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சுதீஷ் (வயது 38), ஷானி (31) என்பதும், அவர்கள் 2 பேரும் கணவன், மனைவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்