பழவேற்காடு ஏரிக்குள் பாய்ந்த வேன்
பழவேற்காடு ஏரிக்குள் வேன் நிலைத்தடுமாறி பாய்ந்தது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்களில் சிலர் சோழவரம், கும்மிடிபூண்டி, அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேன்கள் மூலம் தினந்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனர். பழவேற்காடு ஏரியின் குறுக்கே பல இடங்களில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு முக்கிய சாலையில் இருந்து தோணிரவுக்கு ஏரிக்கு நடுவில் சிமெண்டு சாலை செல்கிறது.
இந்த சாலையின் குறுக்கே செஞ்சியம்மன் நகர், கோட்டைக்குப்பம் செல்வதற்காக தற்காலிக சாலை அமைந்துள்ளது. இங்குள்ள 500-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியை அடுத்த பல இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை தனியார் வேன் ஒன்று கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செல்வதற்காக பழவேற்காட்டை அடுத்த தோணிரவு கிராமத்திற்கு சென்று அங்கு வேலைக்கு செல்வதற்காக காத்திருந்த 3 பெண்களை வேனில் ஏற்றினர்.
பின்னர் அந்த வேன் செஞ்சியம்மன் நகரில் காத்திருக்கும் பெண்களை அழைத்து செல்வதற்காக சென்று கொண்டிருந்தது. தோணிரவில் இருந்து செஞ்சியம்மன் நகருக்கு செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பழவேற்காடு ஏரியில் நிலை தடுமாறி பாய்ந்தது. வேனில் இருந்த பெண்கள் சத்தம் போடவே அங்கு பொதுமக்கள் ஓடிவந்து வேனில் இருந்த பெண்களை மீட்டனர். பழவேற்காடு ஏரியில் வேன் நிலைத்தடுமாறி இறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.