முக்கூடல் அருகே பயங்கரம் பெண் சரமாரி வெட்டிக்கொலை 2 பேர் கைது
முக்கூடல் அருகே பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல்,
நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி அருகே உள்ள செங்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 40), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிச்செல்வம் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மகன் மாரிச்செல்வம் தனது பாட்டி வீட்டுக்கு தூங்க சென்று விட்டான். இதனால் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலையில் வேலை முடிந்து முத்துப்பாண்டி தனது வீட்டுக்கு வந்தார்.
வெட்டிக்கொலை
அங்கு தனது மனைவி முப்புடாதி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் முப்புடாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியின் நண்பர் கந்தபாண்டி மகன் பிரேம் (35) மற்றும் சுப்பிரமணியன் மகன் துர்க்கைமுத்து (20) என்பதும், முப்புடாதியை அவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
ஏற்கனவே முத்துப்பாண்டிக்கும், பிரேமுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் அங்கு வந்த முப்புடாதி, பிரேமை அவதூறாக பேசியுள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக பிரேம், துர்க்கை முத்து ஆகிய இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்துப்பாண்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு முத்துப்பாண்டி இல்லை என்று தெரிந்ததும் முப்புடாதியை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து பிரேம், துர்க்கைமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.