நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 57 பேர் நேற்று ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 171 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 20 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். ஆஸ்பத்திரிகளில் 259 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 209 பேர் பலியாகி உள்ளனர்.
தென்காசி-தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இன்னும் 77 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 155 பேர் பலியாகி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 480 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 31 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 139 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.
542 பேருக்கு சிகிச்சை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 57 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 37 ஆயிரத்து 27 பேர் குணமடைந்து உள்ளனர். இன்னும் 542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.