டி.ஜே.ஹள்ளி வன்முறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீவைப்பு பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் கைது

டி.ஜே.ஹள்ளி வன்முறையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-17 23:36 GMT
பெங்களூரு, 

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை வெடித்திருந்தது. இதில், டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு தீவைக்கப்பட்டதுடன், புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்தி, அவரது உறவினர் நவீன் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார்.

அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் சகோதரி மகன் நவீன், சிறுபான்மையினருக்கு எதிராக முகநூலில் பதிவு வெளியிட்டதால், இந்த வன்முறை உண்டாகி இருந்தது. வன்முறை தொடர்பாக டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் மற்றும் எம்.எல்.ஏ. வீட்டுக்கு தீவைத்தது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரமுகர்கள், காங்கிரஸ் கட்சியின் பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்.

மருத்துவமனையில் அனுமதி

வன்முறையில் கைதானவர்களில் சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதால், அதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், எம்.எல்.ஏ.வின் உறவினர் நவீன் சிறுபான்மையினருக்கு எதிராக முகநூலில் பதிவு வெளியிட்டது ஒரு காரணமாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக தான் வன்முறை சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகவும், இதற்கு பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜாகீருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

வன்முறையில், முன்னாள் மேயர் சம்பத்ராஜிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டினார்கள். அப்போது அவரது உதவியாளர் அருணின் செல்போனில் இருந்து வன்முறையில் கைதான பலருக்கு, ஆகஸ்டு 11-ந் தேதி பலமுறை பேசப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சம்பத்ராஜிடம் விசாரணை நடத்திவிட்டு, அதன்பிறகு, அவரை கைது செய்ய தீர்மானித்து 2-வது முறையாக அவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து உடல் நலக்குறைவை காரணம் காட்டி தனியார் மருத்துவமனையில் சம்பத்ராஜ் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் மேயர் தலைமறைவு

அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்கள். அதில், முன்னாள் மேயர் சம்பத்ராஜ் 51-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அந்த குற்றப்பத்திரிகையில், புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாசமூர்த்திக்கும், அக்கட்சியின் முன்னாள் மேயர் சம்பத்ராஜிக்கும் இடையே இருந்த அரசியல் பிரச்சினைகளால் வன்முறை சம்பவம் நடந்திருப்பதாகவும், இதில், சம்பத்ராஜ் மூளையாக செயல்பட்டு அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டுக்கு தீவைக்க தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சம்பத்ராஜை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினார்கள். பின்னர் கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சம்பத்ராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாகி விட்டார். வன்முறை வழக்கில் முக்கிய நபர் தலைமறைவானதால், தனியார் மருத்துவமனைக்கு போலீசார் நோட்டீசு அனுப்பினார்கள். மேலும் வன்முறை வழக்கில் முக்கிய நபரை போலீசாரிடம் தெரிவிக்காமல் டிஸ்சார்ஜ் செய்ததால், அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி கர்நாடக மருத்துவ கவுன்சிலுக்கு பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கடிதமும் எழுதி இருந்தார்.

ஆதரவாளர் சிக்கினார்

இதற்கிடையில், தலைமறைவாகி விட்ட சம்பத்ராஜை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், தமிழ்நாடு, கேரளா, மும்பையில் முகாமிட்டு சம்பத்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதை தவிர்க்கும் விதமாக சம்பத்ராஜை தேடப்படும் நபராக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர்.

மேலும் முன்னாள் மேயர் சம்பத்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜாகீரின் ஆதரவாளரான ரியாஜுத்தீன் என்பவரை பிடித்து நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பத்ராஜ் பற்றிய முக்கிய துப்பு போலீசாருக்கு கிடைத்தது. ஏற்கனவே சம்பத்ராஜை ரியாஜுத்தீன் நாகரஒலே வனப்பகுதிக்கு தனது காரில் அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும் அவருக்கு, ரியாஜுத்தீன் தான் அடைக்கலம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் ரியாஜுத்தீனை போலீசார் கைது செய்தார்கள்.

சம்பத்ராஜ் கைது

இந்த நிலையில், பெங்களூரு பென்சன்டவுன் அருகே தலைமறைவாக இருந்த மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜை நேற்று முன்தினம் நள்ளிரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். ரியாஜுத்தீன் கொடுத்த தகவலின் பேரில், அவரை போலீசார் கைது செய்திருப்பது தெரியவந்தது. இதனை மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீலும் உறுதி செய்தார். அதாவது டி.ஜே.ஹள்ளி வன்முறை, அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ.வின் வீட்டுக்கு தீவைத்த வழக்கில் மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்று நேற்று இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

இதையடுத்து, கைதான சம்பத்ராஜிடம் நேற்று சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் உதவி போலீஸ் கமிஷனர் வேணுகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது டி.ஜே.ஹள்ளி வன்முறையில் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டுக்கு தீவைக்க காரணம் என்ன?, இந்த சம்பவத்திற்கு பின்னணி என்ன?, இத்தனை நாட்கள் எங்கு தலைமறைவாக இருந்தீர்கள், விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தது ஏன்? என்பது உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தமிழகத்தை சேர்ந்தவர்

பின்னர் நேற்று மாலையில் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். டி.ஜே.ஹள்ளி வன்முறை குறித்து சம்பத்ராஜிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சம்பத்ராஜை வருகிற 19-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, சம்பத்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் மேயர் சம்பத்ராஜின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவர் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். புலிகேசிநகர் வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகி இருந்தார். பெங்களூரு மாநகராட்சி மேயராக ஓராண்டு பதவியில் இருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் சி.வி.ராமன்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சம்பத்ராஜ் தோல்வி அடைந்திருந்தார். டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கில் மாநகராட்சி முன்னாள் மேயர் கைதாகி உள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்