கொரோனா பீதிக்கு மத்தியில் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன

கொரோனா பீதிக்கு மத்தியில் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன.

Update: 2020-11-17 23:34 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கல்லூரிகள் உள்பட அனைத்து வகையான கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் 17-ந் தேதி (நேற்று) கல்லூரிகள் திறக்கப்படும் என்ற கடந்த அக்டோபர் மாதம் மாநில அரசு அறிவித்தது. இதையொட்டி கல்லூரிகளை திறக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டது.

அதாவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை கட்டாயம், வகுப்புகளை சானிடைசர் கொண்டு தூய்மைபடுத்துவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உடல்வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்துவது போன்ற பல்வேறு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பீதிக்கு மத்தியில் 8 மாதங்களுக்கு பிறகு திட்டமிட்டப்படி கர்நாடகத்தில் டிகிரி கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டு தற்போது தொடங்கியுள்ளது.

மாணவர்களின் வருகை

கொரோனா பரிசோதனை செய்து, வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்தவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களின் வருகை பதிவு வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

ராய்ச்சூர் மாவட்டத்தில் ஒரு வகுப்பில் ஒரு மாணவர் மட்டுமே வந்திருந்தார். அவர் ஒருவருக்காக ஆசிரியர் பாடம் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் முதல் நாளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. அடுத்து வரும் நாட்களில் மாணவர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் தங்களின் வகுப்பறைகள் மற்றும் இருக்கையை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்