நெல்லை, தென்காசியில் மழை நீடிப்பு: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.

Update: 2020-11-17 19:11 GMT
நெல்லை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. நெல்லை மாநகர பகுதியில் காலையில் லேசான தூறல் விழுந்தது. மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. பின்னர் சிறிது நேரம் வெயில் அடித்தது. மாலையில் அவ்வப்போது விட்டு, விட்டு லேசாக மழை பெய்தது.

இதேபோல் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை கொட்டியது. தொடர்ந்து இரவிலும் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.

தாமிரபரணியில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதாலும், கிராமப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் மழைநீர் சேர்வதாலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு செல்கிறது. அங்கு ஆற்றின் குறுக்கே குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்காக பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக ஆற்றின் நடுவே தூண்கள் அமைத்து இணைப்பு கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதை சுற்றி அடைக்கப்பட்டிருந்த மணல் மேட்டை தண்ணீர் அரித்து சென்றது.

முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது

குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது அந்த கோவிலில் கந்த சஷ்டி யாகசாலை பூஜை நடப்பதால், நேற்று பூசாரி மற்றும் ஒருசில பக்தர்கள் மட்டும் கோவிலின் வடக்கு பகுதி வழியாக தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று கோவிலில் வழிபட்டனர். தொடர் மழை காரணமாக நெல்லை டவுன் நயினார்குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து ஓடுகிறது. இதேபோல் நெல்லை அருகே கரையிருப்பு சிதம்பரநகர் பால்கட்டளை குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. மேலும் ஆற்றுப்பாசன குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. பாளையங்கோட்டை அருகே மருதூரில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணையை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

நெல்லை சந்திப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது. நேற்று முன்தினம் நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் மழைக்கு தலா ஒரு வீடு இடிந்து சேதம் அடைந்தது. நேற்றும் பல்வேறு இடங்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தடுப்பணையை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் மலையில் உள்ள நெட்டேரியங்கால் அருவி, கருங்கல் கசம், செங்கல்தேரி பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், ஆட்கள் இன்றி அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

பாபநாசம்-138, சேர்வலாறு-74, மணிமுத்தாறு-63, நம்பியாறு-27, கொடுமுடியாறு-15, அம்பை-29, சேரன்மாதேவி-13, ராதாபுரம்-32, நாங்குநேரி-40, களக்காடு-55, மூலைக்கரைப்பட்டி-40, பாளையங்கோட்டை-75, நெல்லை-60.

கடனா-26, ராமநதி-40, கருப்பாநதி-55, குண்டாறு-21, அடவிநயினார்-48, ஆய்க்குடி-29, சங்கரன்கோவில்-53, செங்கோட்டை-18, சிவகிரி-51, தென்காசி-44.

மேலும் செய்திகள்