விளாத்திகுளத்தில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-11-17 16:46 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மரியஅந்தோணி என்பவரது மகன் ஜெரோமின் இருதயராஜ் (வயது19) .இவர் கடந்த 6 மாத காலமாக விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தை நீரை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கியது

அப்போது அருகிலிருந்த மின் மோட்டாரில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு, ஜெரோமின் இருதயராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு, விளாத்திகுளத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்