வரைவு பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்

மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.;

Update: 2020-11-16 22:30 GMT
மதுரை, 

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021-ம் ஆண்டினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 12 லட்சத்து 84 ஆயிரத்து 99, பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 23 ஆயிரத்து 420 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 174 ஆகும். அதன்படி ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இந்த வரைவு பட்டியலில் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் வேறு சட்டமன்ற தொகுதியிலும் பெயர் சேர்க்கப்பட வில்லை என்பதற்கான உறுதிமொழி அளிக்க வேண்டும். அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

வருகிற 21, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும். முன்னதாக கலெக்டர் அன்பழகன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரநிதிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அதில் மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்