வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

மதுரையில் வாலிபர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2020-11-17 03:23 GMT
மதுரை,

மதுரை காமராஜர்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனியசாமி(வயது 25), பிரபல ரவுடி. சம்பவத்தன்று இவர் உள்பட 5 பேர் கீழவெளிவீதி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே ஆட்டோவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது காரில் ஒரு கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் ஆயுதங்களுடன் காரில் இருந்து இறங்குவதை கண்டதும் முனியசாமி மற்றும் அவருடன் இருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அந்த கும்பல் ஆட்டோவில் இருந்த முனியசாமி மற்றும் அவருடன் இருந்தவர்களை வெட்டியது. இதில் முனியசாமி உள்ளிட்ட 2 பேர் கத்திக்குத்து காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

ஆனால் அவர்களுடன் இருந்த உத்தங்குடியை சேர்ந்த முருகானந்தம்(21) என்பவர் அந்த கும்பலின் பிடியில் சிக்கி கொண்டார். அந்த கும்பல் முருகானந்தத்தை சரமாரியாக வெட்டி அவரது தலையை துண்டித்து வீசிவிட்டு காரில் ஏறி தப்பிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த காட்சியை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் போலீசார் துண்டிக்கப்பட்ட முருகானந்தத்தின் தலை மற்றும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீரைத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முனியசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தங்களை கொலை செய்ய முயன்றது முன்னாள் தி.மு.க. மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் தரப்பை சேர்ந்த சின்ன அலெக்ஸ், அழகுராஜா, பவ்வு என்ற பழனிமுருகன், பொட்டு ராஜா, மருது ஆகியோர் கொண்ட கும்பல் தான் என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து காரில் தப்பி சென்ற அவர்கள் 5 பேரை பிடிக்க வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையறிந்த அந்த கும்பல் தாங்கள் வந்த காரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். அந்த காரை மீட்டு அதிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய 4 பெரிய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியனுக்கு இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதில் இருதரப்பையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வி.கே.குருசாமியின் மருமகன் பாண்டியனை, ராஜபாண்டியனின் தரப்பை சேர்ந்த வெள்ளைக்காளி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கொலை செய்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பலர் தலைமறைவாக உள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் தீபாவளி பண்டிகையொட்டி மதுரை வந்தார்.

பின்னர் அவர் நண்பர் முனியசாமி உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கீழவெளிவீதியில் ஆட்டோவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முருகானந்தமும் மொபட்டில் அங்கு வந்து அவர்களுடன் பேசி கொண்டிருந்தார். மணிகண்டன் மதுரை வந்துள்ளதை அறிந்ததும் வி.கே.குருசாமியின் தரப்பை சேர்ந்த பழனிமுருகன், சின்ன அலெக்ஸ் உள்ளிட்ட சிலர் காரில் வந்து ஆட்டோவில் இருந்த அனைவரையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால் அதில் முருகானந்தம் மட்டும் தப்பி செல்லும் போது தனியாக சிக்கியதால் படுகொலை செய்யப்பட்டார். மணிகண்டன் சிறிய காயத்துடன் தப்பியது தெரியவந்தது. பழிக்குப்பழியாக தொடர்ந்து நடைபெறும் இது போன்ற கொலை சம்பவங்கள் என்று தான் முடிவுக்கு வரும் என்று மதுரை மக்கள் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்