தேவகோட்டையில், சிறுவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி - ஞாபக சக்தியை அதிகரிக்கும் என பயிற்சியாளர் கருத்து
தேவகோட்டையில் சிறுவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்து உள்ளார்.
தேவகோட்டை,
தமிழர்களின் வீர விளையாட்டாக இன்று வரை கருதப்பட்டு வருவது சிலம்பாட்டம். அந்த காலக்கட்டத்தில் சிலம்பாட்டத்தில் ஒரு மனிதன் சிறந்து விளங்கினால் அவனை ஞான குருவாக கடைப்பிடித்து தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம். அதன் பின்னர் அறிவியல் வளர்ச்சி, மனிதனின் அவசர வாழ்க்கை உள்ளிட்டவைகளால் படிப்படியாக சிலம்பாட்டம் மக்களின் மனதை விட்டு மறைய தொடங்கியது.
இருப்பினும் இன்னும் சில கிராமங்களில் உள்ள சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் தங்களுக்கு பின்னால் இந்த கலை அழிந்து விடக்கூடாது என்ற சிந்தனையில் இன்றைய இளம் தலைமுறையினரை அழைத்து வந்து அவர்களுக்கு சிலம்பாட்டம் கற்று கொடுத்து வருகின்றனர். இவ்வாறு தினந்தோறும் இந்த சிலம்பாட்ட கலையை பின்பற்றும் சிறுவர்களுக்கு சிந்திக்கும் திறன் அதிகரிப்பு, சுறுசுறுப்பு, ஞாபக சக்தி உள்ளிட்டவைகள் தானாக வருவது உண்டு.
இவ்வாறு தேவகோட்டை பகுதியில் சிலம்பாட்ட பயிற்சியாளர் ஒருவர் தங்கள் பகுதியில் உள்ள சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தினந்தோறும் காலையில் ராம்நகர் பகுதியில் சிலம்பாட்ட பயிற்சியை அளித்து வருகிறார். இதுகுறித்து சிலம்பாட்ட பயிற்சியாளர் பக்கீர்முகமது கூறியதாவது:-
இன்றைய காலக்கட்டத்தில் வீடுகள் தோறும் அறிவியல் வளர்ச்சி காரணமாக டி.வி, செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுது போக்கு சாதனங்கள் உள்ளன. தற்போது கொரோனா காலக்கட்டமாக இருப்பதால் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீடுகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் எப்போதும் செல்போன், டி.வி.யே கதி என்று இருந்து வருகின்றனர்.
தினந்தோறும் சிறுவர்கள் வீடுகளில் செல்போன் மற்றும் டி.வி.யை அதிகளவில் பயன்படுத்தும் போது அவர்களின் கண் திறன் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் நாளடையில் அவர்களின் சிந்தனை திறனும் வேகமாக குறைகிறது. சிலம்பம் என்பது தமிழர்களின் வீரத்தின் அடையாளம். ஒரு மனிதன் தனது திறமையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு முதல்படி தான் இந்த சிலம்பாட்ட பயிற்சி. அந்த வகையில் தற்போது தேவகோட்டை பகுதியில் 20 சிறுவர்களை வரை அழைத்து வந்து அவர்களுக்கு தினந்தோறும் சிலம்பாட்ட பயிற்சி வழங்கி வருகிறேன். சிலம்பாட்டத்தில் குத்து வரிசை, அடிமுறை வரிசை மற்றும் போர்சிலம்பம், அலங்கார சிலம்பம் ஆகிய வகைகள் உள்ளது. இதில் முதலில் தன்னை தானே பாதுகாக்கும் வகையில் உள்ள போர் சிலம்பம் என்று அழைக்கப்படும் இந்த சிலம்பம் வகையை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். தற்போது சிலம்பம் கற்பதால் சிறுவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.