வேலூர் மாவட்டத்தில், 9 ஆண்டுகளாக ஏரிகளை தூர்வாராததால் விவசாயிகள் பாதிப்பு - ஆர்ப்பாட்டத்தில் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேச்சு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக ஏரிகளை தூர்வாராததால் ஏரிகள் வறண்டு உள்ளன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.
காட்பாடி,
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா பாலாறு முதல் இறைவன்காடு, செதுவாலை, விரிஞ்சிபுரம், அன்பூண்டி, மேல்மொணவூர், சதுப்பேரி ஏரி, தொரப்பாடி ஏரி வரை வரை செல்லும் மோர்தானா அணையின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காட்பாடி காந்திநகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் கண்டித்து தி.மு.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மோர்தானா அணையின் நீர்வரத்து கால்வாய்கள் கடந்த 9 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோர்தானா அணை நிரம்பி வழிந்து விட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் பாலாற்றில் தண்ணீர் ஓடும். அதற்குள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வார வேண்டும். இல்லையென்றால் இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக தொடரும். சாலை மறியல் செய்வோம்.
நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். அப்போது வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்பாடி வேலூர், அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர். காட்பாடி, வேலூர், அணைக்கட்டு தொகுதியில் பாதாளசாக்கடை திட்டம் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டி அதனை மூடியும் மூடாமலும் விட்டுள்ளனர். வாகனங்களில் செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளத்தை மூடி சிமெண்டு சாலை போட்டால் சாலை நன்றாக இருக்கும். ஆனால் அது போல செய்வதில்லை. இதனால் வேலூர் மாநகராட்சியை கண்டித்து விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகத்தை சந்தித்து ஏரிகளை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் வி.எஸ்.விஜய், சி.ஞானசேகரன், ப.நீலகண்டன், பகுதி செயலாளர்கள் வன்னிய ராஜா, சுனில்குமார், பரமசிவம், தங்கதுரை, பொதுக்குழு உறுப்பினர் ஞானவேல், காந்தி நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.