புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்தது
புதுவையில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா பாதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அந்த நிலை குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் பாதிக்கப்படுபவர்களைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் சரிந்துள்ளது.
13 பேருக்கு தொற்று
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் புதுவை மாநிலத்தில் 1,755 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 13 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. உயிரிழப்பு இல்லை. அதே நேரத்தில் 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் 25 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 36 ஆயிரத்து 337 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 902 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 265 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 637 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 827 பேர் குணமடைந்துள்ளளர்.
உயிரிழப்பு
இதுவரை 608 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 498 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் உயிரிழப்பு 1.67 சதவீதமாகவும், குணமடைவது 95.84 சதவீதமாகவும் உள்ளது.