கலெக்டர் அலுவலகத்துக்கு சங்குடன் வந்த தமிழ்தேசிய கட்சியினர் ஊத முயன்றபோது போலீசார் பிடுங்கி சென்றனர்
ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியத்தை விடுவிக்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்தேசிய கட்சியினர் சங்குடன் வந்தனர். சங்கை ஊத முயன்றபோது போலீசார் அதனை பிடுங்கிச்சென்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தங்கள் மனுக்களை அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். சிலர் மனுக்களை கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
இந்த நிலையில் தமிழ்தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சங்குடன் வந்தனர். அவர்கள் அதனை ஊத முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை பறித்துச்சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியம் கடந்த ஜூன் மாதம் முதல் 6 மாதங்களாக விடுவிக்கப்படவில்லை. இதனால் அன்றாட செலவினங்களுக்கும், மின்சார கட்டணம் செலுத்துவதற்கும், குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கும், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு செலவுகள் செய்யவும் சிரமப்படுகிறார்கள்.
விடுவிக்க வேண்டும்
ஒப்பந்ததாரர்களுக்கும் தொகை விடுவிக்கப்படவில்லை. இதனால் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் மன வேதனையுடன் பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மன வேதனையுடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே ஊராட்சிகளுக்கு மாதாந்திரம் விடுவிக்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை காலதாமதம் இன்றி ஒருவாரத்திற்குள் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நல சங்க மாநில மகளிரணி பொறுப்பாளர் புவேனஸ்வரி தலைமையில் மத்திய மண்டல பொறுப்பாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிக பட்ச வயது 40 என்பதை அரசு நீக்கம் செய்து என்.சி.டி.இ. அறிவித்ததை இதற்கு முன்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என அரசு ஆணை வழங்கி உதவ வேண்டும். அரசு பள்ளிகளில் வரலாறு காணாத அளவுக்கு அதிகமான மாணவர்களின் சேர்க்கை உள்ளது. எனவே புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் செய்து பணி நியமனம் வழங்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் தற்காலிக பணியிடங்களை உருவாக்கி அதன் மூலம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டதை நீக்கம் செய்து, ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.