புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.

Update: 2020-11-16 20:00 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சிதோஷ்ண நிலையில் மாற்றம் இருந்ததால் புதுக்கோட்டையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை தொடர்ந்து தூறியபடியே இருந்தது. அவ்வப்போது இடையில் லேசாக விட்டு விட்டு பெய்தது. வானில் மேகம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் மழை வேகமாக பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. சாக்கடை நீரோடு மழை நீரும் கலந்து சாலையில் பாய்ந்தோடியது.

முகப்பு விளக்குகள்

கனமழை பெய்ததால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலர் ஆங்காங்கே சாலையோரம் மழைக்கு ஒதுங்கி நின்றனர். ஒரு சிலர் மழையில் நனைந்த படியும் சென்றனர். கார்கள், இரு சக்கர வாகனங்கள், பஸ்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. கொட்டும் மழையில் குடையை பிடித்த படியும் இரு சக்கர வாகனங்களில் சென்றதை காணமுடிந்தது.

புதுக்கோட்டை நகர பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தாழ்வான பகுதிகளில் புகுந்தது. மழை நின்ற பின் ஆங்காங்கே ஒதுங்கி நின்றவர்கள் இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் வட்டாரத்தில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை அவ்வப்போது, விட்டுவிட்டு பெய்தது. நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக திருவரங்குளம், வல்லத்ராகோட்டை, வாண்டா கோட்டை திருவுடையார்பட்டி குளவாய்பட்டி கீழையூர கொத்த கோட்டை வ்ம்பன் நாள் ரோடு காயாம்பட்டி, கல்லுபள்ளம், மாங்கநாம்பட்டி, வேப்பங்குடி, பொற்பனைக்கோட்டை, திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, கேப்பரை, தோப்புக்கொல்லை, கைக்குறிச்சி, பூவரசகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரிமளம்

அரிமளம், கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, கடியாபட்டி, நமணசமுத்திரம், கல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான தூறல் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்தது. ஆனால் குளம் மற்றும் கண்மாய்களில் நீர்மட்டம்உயரவில்லை.

அறந்தாங்கி

அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள் சிரமபட்டனர். இதேபோல் ஆதனகோட்டை, சோத்துப்பாழை, வளவம்பட்டி, கருப்புடையான்பட்டி, வண்ணாரப்பட்டி, கல்லுக்காரன்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்ஊரணி, குப்பையன்பட்டி, பெருங்களூர், மங்களத்துப்பட்டி, பெருங்கொண்டான்விடுதி, வாராப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் லேசானது முதல் கன மழை பெய்தது.

மேலும் செய்திகள்