கீழப்பழுவூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கீழப்பழுவூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே சிலுப்பனூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தார்ச்சாலை வசதி செய்து தரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மண் சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். முதியவர்கள் இந்த சாலையில் நடக்கும்போது சகதியில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது. மேலும் இந்த வழியாக நடமாடும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. கொசு தொந்தரவு ஏற்பட்டு பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படாததாலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படாததாலும் பொதுமக்கள் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
போராட்டம்
இந்நிலையில் தற்போது பெய்துவரும் அடைமழையால் சாலை சேறும், சகதியுமாக மாறி நடப்பதற்கு கூட லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையின் அவலநிலையை எடுத்துக்காட்டும் வகையில் சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தின்போது, தார்ச்சாலை அமைக்க கோரியும், குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்றும் அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து, சாலையில் நாற்று நட்டனர்.