நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடதமிழகம் வரை நீடிப்பதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 100.80 கன அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,242.76 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,389.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.83 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அதேபோல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 115 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 70 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 57.91 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்டது. தற்போது அணைக்கு வினாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அணையில் இருந்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 96 அடியாக உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பதிவான மழையளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்- 20, சேர்வலாறு- 11, அம்பை- 13, மணிமுத்தாறு-3, சேரன்மாதேவி -2.4, ராதாபுரம்- 19, நாங்குநேரி-2 பாளையங்கோட்டை-6, நெல்லை-3. கடனாநதி-4, ராமநதி-15, கருப்பாநதி- 5, அடவிநயினார்-3, சங்கரன்கோவில்-1, சிவகிரி- 11, செங்கோட்டை- 1.