கொடுமுடி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் சாவு
கொடுமுடி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
கொடுமுடி,
கொடுமுடி அருகே அஞ்சூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன்கள் கோகுல் (வயது 23), மனோஜ் (20). கோவையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் கோகுல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மனோஜ் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கோகுல், மனோஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு குளிப்பதற்காக பகல் 2.30 மணி அளவில் காவிரி ஆற்றில் உள்ள மணல்மேடு பகுதிக்கு சென்றனர்.
முதலில் மனோஜ் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட உடனே மனோஜின் கையை பிடித்து இழுக்க கோகுல் முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அண்ணன், தம்பியின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகன் லோகநாதன் (32). இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். லோகநாதன் ஊஞ்சலூர் அருகே பெருமாபாளையம் என்ற ஊரில் உள்ள மாமியார் வீட்டுக்கு தீபாவளிக்காக குடும்பத்துடன் வந்திருந்தார்.
இந்த நிலையில் லோகநாதன், அவருடைய மனைவி சுமதி (24), 2 பெண் குழந்தைகள் காரணம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணைக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். இதில் லோகநாதன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். இதனால் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் மீனவர்கள் அங்கு சென்று அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் இரவு வரை லோகநாதன் கிடைக்கவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.