விடுமுறையையொட்டி சேலம் குரும்பப்பட்டி பூங்கா, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
விடுமுறையையொட்டி நேற்று சேலம் குரும்பப்பட்டி பூங்கா, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம்,
சேலத்தில் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் இந்த வன உயிரியல் பூங்கா கடந்த 7 மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருந்தது. இருப்பினும், வன ஊழியர்கள் தினமும் வந்து வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு வழங்கி சென்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த வாரம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் பூங்காவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வராமல் இருந்து வந்தனர். சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி நேற்று காலையில் இருந்தே சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் கார், வேன், ஆட்டோ, மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வன உயிரியல் பூங்காவிற்கு வந்து சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
பூங்காவின் முன்புறம் வனத்துறையினர் நின்று முக கவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே பூங்காவிற்குள் செல்ல அனுமதி அளித்தனர். இதுதவிர கிருமி நாசினியும் கைகளில் தெளிக்கப்பட்டது. உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. 7 மாதங்களுக்கு பின்னர் பூங்காவில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்ததால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் முக கவசம் அணிந்து இருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர். பூங்காவிற்குள் பராமரிக்கப்பட்டு வரும் புள்ளிமான், கட மான், குரங்கு, முதலை, ஆமை, மயில், வண்ணப் பறவைகள், நாரைகள், மலைப்பாம்புகள் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர். ஒரு சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு செல்லும் வழியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மோசமாக உள்ளது. புதிய சாலை அமைக்க சாலையில் உள்ள கற்கள் பெயர்த்து போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு இடையே பூங்காவிற்கு வந்து சுற்றி பார்த்து சென்றனர்.
எனவே, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையை உடனே சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டூரில் உள்ள பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து செல்வார்கள். தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளதால் மேட்டூரை காண வரும் சுற்றுலா பயணிகள் மேட்டூர் அருகே உள்ள கால்வாய் கரையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். சில சுற்றுலா பயணிகள் காவிரி ஆறு மற்றும் கால்வாயில் குளித்து மகிழ்கின்றனர்.
இதேபோல் நேற்றும் சுற்றுலா பயணிகள் வந்தனர். பெரும்பாலானோர் மேட்டூர் அணை மற்றும் பூங்கா முன்புறம் அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளில் தங்களுக்கு விருப்பமான மீன்களை சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இவர்கள் அனைவரும் பூங்காவை காணமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.