ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதிய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேட்டி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருந்த திவ்யதர்ஷினி மாறப்பட்டு, அவருக்கு பதில் புதிய கலெக்டராக கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சப்-கலெக்டர் இளம்பகவத் மற்றும் கூடுதல் கலெக்டர்கள், அதிகாரிகள் பூச்செண்டு வழங்கி வரவேற்றனர். பின்னர் புதிய கலெக்டர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தி வளர்ச்சி பணிகளை சிறப்பாக செய்வேன். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிவர்த்தி செய்யப்படும். அரசு திட்டங்கள் அனைத்தையும் பொது மக்களுக்கு சென்றடைய செய்வேன். கொரோனா வைரஸ் தொற்று தற்போது சற்று குறைந்து வருகிறது. பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து வருகிறோம்.
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்வேன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிறைவடையாமல் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். கனிம வளம், மண், மணல் கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் சிப்காட்டில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இடைத்தரகர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.