அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு ராஜவர்மன் எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 2011-ம் வருடம் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு இறுதியில் அவர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை விருதுநகர் மாவட்டத்தை கட்சி ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டமாக பிரித்து மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை மாவட்ட செயலாளராகவும், கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் கா. ரவிச்சந்திரனை மாவட்ட செயலாளராகவும் நியமித்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்ராஜேந்திர பாலாஜியும், ரவிச்சந்திரனும் சென்னை சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வின்போது ராஜவர்மன் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் வெம்பக்கோட்டை கா.ரவிச்சந்திரனையும் வாழ்த்தினார். அவருடன் சாத்தூர் அ.தி.மு.க. நிர்வாகிகளும் வந்திருந்தனர். வாழ்த்து தெரிவிக்க வந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ.வை அமைச்சர் அன்புடன் வரவேற்றார். இந்த சந்திப்பு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் மூலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது. இதன் மூலம் அடுத்து எடுக்கவேண்டிய தேர்தல் பணிகளில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டுதலின் பேரில் முழுமூச்சுடன் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் விருதுநகர் தர்மலிங்கம், கே.கே. கண்ணன், சாத்தூர் சண்முககனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.