வானூர் அருகே குடிபோதையில் கலாட்டா இரு கிராமங்களுக்கு இடையே மோதல்; கடைகளுக்கு தீ வைப்பு 2 பேர் கைது

வானூர் அருகே குடி போதையில் கலாட்டா செய்தவர்களால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-11-16 04:32 GMT
வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் தொள்ளமூர் அருகே உள்ள ஒரு மதுபான கடையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்தனர். பின்னர் அவர்கள் தொள்ளமூர் வழியாக கேலியும், கிண்டலுமாக, கலாட்டா செய்தவாறு பேசிக்கொண்டே கரசானூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தொள்ளமூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் அவர்களை வழிமறித்து எங்கள் ஊரில் ஏன் குடித்துவிட்டு கேலியும் கிண்டலுமாக பேசுகின்றீர்கள் என்று கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அந்த 4 பேரும் கரசானூர் சென்று தங்கள் ஆதரவாளர்கள் 25 பேரை அழைத்துக் கொண்டு தொள்ளமூர் வந்தனர். அங்கு கண்ணில் பட்டவர்களை தாக்கியதாக தெரிகிறது. மேலும் முத்திரம்மாள்(வயது 47), ராஜேஷ்(21) ஆகியோரது கடைகளை சூறையாடி தீ வைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் தொள்ளமூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு ஒன்று கூடி கரசானூர் பகுதியை சேர்ந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம், வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட உடன் கலவரக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் அங்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரசானூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி(24), தொள்ளமூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இருதரப்பையும் சேர்ந்த 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்