காதலை முறித்து கொண்ட இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து வாலிபர் வெறிச்செயல்
மைசூரு டவுனில் காதலை முறித்துக்கொண்ட இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு,
மைசூரு டவுன் தேவராஜா மொகல்லா பகுதிக்கு உட்பட்ட திவான்ஸ் சாலையில் வசித்து வருபவர் அஸ்வினி(வயது 19). இந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ககன் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ககனின் நடவடிக்கைகளும், செயல்களும் அஸ்வினிக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் அஸ்வினி, ககனை விட்டு பிரிய தொடங்கினார். ஒரு கட்டத்தில் அஸ்வினி வெளிப்படையாகவே ககனிடம் இருந்து தனது காதலை முறித்துக் கொண்டார். இது ககனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ககன் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் தனது காதலை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி அஸ்வினியிடம், ககன் வற்புறுத்தி வந்தார். ஆனால் அஸ்வினி, ககனின் காதலை முற்றிலுமாக நிராகரித்து விட்டார்.
தீவிர சிகிச்சை
இந்த நிலையில் நேற்று காலையில் அஸ்வினி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ககன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அஸ்வினியின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஸ்வினியை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து லட்சுமிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வலைவீச்சு
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒருதலை காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தது தெரியவந்தது. அதாவது தனது காதலை கைவிட்டதால் ஆத்திரத்தில் அவரை ககன் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள ககனையும் வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.