கோவையில் மோடியின் மகள் திட்டம் தொடக்கம்

மோடியின் மகள் என்ற இந்த திட்டத்தில் 100 பெண் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-11-15 16:45 GMT
கோவை, 

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டம் தொடக்க விழா கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நடந்தது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தை கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதிசீனிவாசன் கலந்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

மோடியின் மகள் என்ற இந்த திட்டத்தில் 100 பெண் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் பதிவு செய்து கொண்டுள்ள பெண் குழந்தைகளின் பெயர்களில் வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும். 5 ஆண்டுகாலத்திற்கு பிறகும் அந்த குழந்தைகளின் படிப்புக்கு நிதி உதவி அளிக்கவும் தயாராகவும் உள்ளோம். பிரதமர் மோடி எந்த ஒரு திட்டத்தை அமல்படுத்தினாலும் அது பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பலன் அளிக்கும் என்பதை அடிப்படையாக வைத்திருக்கிறார். நாட்டில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக மோடி அமல்படுத்தி வருகிறார். அவர் கொண்டு வந்த செல்வமகள் திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நகரப்புற பெண்களுக்கு தொழில் தொடங்கவும், கிராமப்புற பெண்களுக்கு கழிப்பிடம், வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மா.சின்னராசு, சபரிகிரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கவிழாவையொட்டி பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு சேலை மற்றும் நலத் திட்ட உதவிகளும், பிரதமர் நரேந்திரமோடியின் போட்டோவும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்