திட்டக்குடி அருகே, காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் - குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நடந்தது

திட்டக்குடி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-15 06:31 GMT
விருத்தாசலம், 

திட்டக்குடி அருகே உள்ள கோடங்குடி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் தெருமின் விளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவர் அம்பிகா தலைமையில் கோடங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்களுக்கு ஆதரவாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுப்பிரமணியன், பெரியசாமி உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்