ரூ.36 லட்சம் மோசடி; மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் கைது
ரூ.36 லட்சம் மோசடி புகாரில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர்,
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சாருலதா (வயது 40). இவர்கள் சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் ‘செக்யூரிட்டி ஏஜென்சி’ வைத்து நடத்தி வந்தனர்.
2016-ம் ஆண்டுக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் லண்டன் சென்றுவிட்டனர். இதனால் பிரேம்குமாரின் தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு சென்னை மாவட்ட செயலாளருமான பிரவீன்குமார்(33) என்பவரிடம் ‘செக்யூரிட்டி’ நிறுவனத்தை ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை கவனித்து வந்த பிரவீன்குமார், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதுடன், அந்த நிறுவனத்தை தனது பெயருக்கு மாற்றியதாகவும் தெரிகிறது.
தங்கள் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சரியான வருமானம் இல்லாததால் சாருலதா, தனது தந்தை தேவேந்திரன் மூலம் இதுபற்றி விசாரிக்கும்படி கூறினார். அதன்படி அவர் விசாரித்தபோது, அவரை பிரவீன்குமார் மிரட்டும் தோணியில் பேசியதுடன், அந்த நிறுவனம் தனக்கு சொந்தம் எனவும் கூறினார்.
இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர், பிரவீன்குமாரிடம் விசாரித்தார். அதில் அவர், அந்த நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்து ரூ.36 லட்சம் வரை மோசடி செய்தது உறுதியானது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.