பெங்களூருவில் சம்பவம்: 3 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை - 2 மாதங்களுக்கு முன்பு மனைவி உயிரை மாய்த்ததால் விபரீத முடிவு
பெங்களூருவில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு மனைவி உயிரை மாய்த்து கொண்டதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு மைகோ லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஜனகராஜ்(வயது 34). இவருக்கு சரஸ்வதி(13) மற்றும் ஹேமதி(9) ஆகிய 2 மகள்களும், 3 வயதில் ராஜ்குமார் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. நேபாளத்தை சேர்ந்த ஜனகராஜ், பெங்களூருவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் காலையில் அவரது வீட்டுக்கதவு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்கள்.
அப்போது ஜனகராஜ், அவரது பிள்ளைகள் ஆகியோர் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக மைகோ லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜனகராஜ் மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், ஜனகராஜ் தனது பிள்ளைகள் சரஸ்வதி, ஹேமதி, ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததுடன், பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் ஜனகராஜின் மனைவியான சாந்தா தேவி தற்கொலை செய்திருந்தார். மனைவி இறந்த பின்பு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் அவர் சிரமப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக மனம் உடைந்த ஜனகராஜ் பிள்ளைகளை கொன்றுவிட்டு, அவரும் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.