கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகளை உடைக்கும் பணி தீவிரம்
கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகளை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு மலைப்பாதை செல்கிறது. இதில் கூடலூரில் இருந்து நடுவட்டம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூர சாலையோரத்தில் பல இடங்களில் ராட்சத பாறைகள் உள்ளன. ஆண்டுதோறும் பருவமழை பெய்யும்போது பாறைகள் சரிந்து சாலையில் விழுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சீசன் காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.
இதைத்தொடர்ந்து அகலம் குறைவான இடங்களில் அந்த சாலையை அகலப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் 27-வது மைல், தவளமலை, நடுவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் உள்ள ராட்சத பாறைகளை உடைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில வாரங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:-
மலைப்பாதையில் சில இடங்களில் வாகனங்கள் செல்ல சிரமப்படும் வகையில் பாறைகள் உள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் சாலை விரிவாக்கம் மற்றும் பாறைகளை உடைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மழை குறைந்து உள்ளது. இதனால் பாறைகளை உடைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவது இல்லை.
மாறாக பாறைகளில் துளைகள் இட்டு அதில் கெமிக்கல் கலவைகள் ஊற்றப்படுகிறது. இதன் மூலம் பாறை வலுவிழந்து விடுகிறது. அதன் பின்னர் சிறிது, சிறிதாக உடைத்து அகற்றும் பணி நடக்கிறது. இதனால் வரும் காலங்களில் பாறை உடைத்த இடங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.