குடிபோதையில் 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
பேரூரில் குடிபோதையில் 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
பேரூர்,
தொண்டாமுத்தூர், வரதராஜபுரம் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, நரசீபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் பார்த்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சென்றபோது 150 அடி ஆழ கிணற்றில் கார்த்திக் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து வாலிபர் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார்த்திக் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.