வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி ஜானிக்கு மருத்துவ பரிசோதனை
ரவுடி ஜானிக்கு நேற்று முன் தினம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அடுக்கம்பாறை,
ரவுடி ஜானிக்கு நேற்று வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரை பார்க்க அனுமதிக்கக்கோரி அவருடைய மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜானி (வயது 34). பிரபல ரவுடியான இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஜானி மீது கொலை, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜானி ஜாமீனில் வந்து தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஜானியை தனிப்படை போலீசார் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். போலீசார் ஜானியை விரட்டிப் பிடித்தபோது அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது தப்ப முயன்ற அவர் தனது மனைவியிடம் செல்போன் ‘வாட்ஸ் அப்’ மூலம் வீடியோ காலில் பேசி தன்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...என்று கூச்சலிட்டவாறே கதறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஜானியின் கூட்டாளி அப்புவையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் நேற்று மதியம் 1 மணி அளவில் மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை மாலை 5.30 மணி வரை நடந்தது. அப்போது காலில் ஏற்பட்ட காயத்துக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஜானியை மருத்துவமனைக்கு அழைத்து வருவதை அறிந்த அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் ஜானியை பார்க்க அனுமதிக்கக்கோரி கோஷமிட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர். இருப்பினும் அவரது மனைவி விபத்து சிகிச்சை பிரிவின் கதவுகளை பிடித்து இழுத்து கூச்சலிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார்.
அப்போது ஜானியின் மனைவி ஷாலினி இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து தனது கணவனை பார்க்க அனுமதிக்கக்கோரி கதறி அழுததுடன், அவரது கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டார். இன்ஸ்பெக்டர் அவரை தள்ளிவிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஜானி மற்றும் அப்பு ஆகியோரை போலீசார் மயக்க நிலையிலேயே, துணியால் மறைத்து ஸ்டிரெச்சர் மூலம் கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றினர். இதனைப் பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் ரவுடி ஜானி மற்றும் அப்புவை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.