தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: மானாவாரி பயிர் சாகுபடிக்கு மாற்றப்பட்ட நெல் வயல்கள்
தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக நெல் சாகுபடி செய்யும் வயல்களில் மானாவாரி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.;
தேனி,
தேனி, உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள், பி.டி.ஆர்-தந்தை பெரியார் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. இங்கு ஒரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு முதல் போக பாசனத்துக்கு கடந்த மாதம் 7-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால், இன்னும் இந்த தண்ணீர் கண்மாய்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் பல இடங் களில் புதர்மண்டியும், மண் மேவியும் கிடக்கிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் கண்மாய்களுக்கு முழுமையாக சென்றடைவது இல்லை. இதன் காரணமாக நெல் சாகுபடி வயல்கள் படிப்படியாக மாற்று விவசாயத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் சார்பில் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டு, கரை சீரமைக்கப்பட்டது. மேலும் கண்மாயின் மேற்கு பகுதியில் புதிதாக கரை அமைக்கப்பட்டது. கண்மாய் தூர்வாரப்பட்ட நிலையில் மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மதகை சீரமைக்கவோ, வரத்து வாய்க்காலை சீரமைக்கவோ பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வரவில்லை. கண்மாயில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதையும் தடுக்கவில்லை.
இதன் விளைவாக மழை நீரும், வாய்க்காலில் வரும் தண்ணீரும் முழுமையாக கண்மாய்க்கு வருவது இல்லை. கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் மதகு சேதம் அடைந்துள்ளதால் தேவைக்கு ஏற்ப தண்ணீரை வெளியேற்றி விவசாயம் செய்ய முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் மக்காச்சோளம், கம்பு, பயறு வகைகள் போன்ற சாகுபடிக்கு மாறியுள்ளனர். பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்த வயல்களில் தற்போது மாற்றுப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கண்மாய் கரையோர பகுதிகளிலும் இந்த ஆண்டு மக்காச்சோளம் மற்றும் பயறு வகைகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், நெல் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான நீர்மேலாண்மை திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.