“பறவைகள் எங்களின் செல்ல பிள்ளைகள்” - பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை தியாகம் செய்யும் கிராம மக்கள்
‘தேர்த்தங்கல் சரணாலய பறவைகள் எங்களின் செல்ல பிள்ளைகள்’ என கருதி தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியை கிராம மக்கள் தியாகம் செய்து உள்ளனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்டது தேர்த்தங்கல் ஊராட்சி. இங்கு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை இல்லாதபோதிலும் மற்ற சரணாலயங்களை விட தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு சற்று அதிகமாக பறவைகள் வந்தன. இதற்கு இந்த சரணாலயத்தில் பறவைகள் வந்து செல்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் தேவையான வசதிகளை வனத்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பறவைகளை தேர்த்தங்கல் ஊராட்சி பகுதி மக்கள் தங்களின் செல்லப்பிள்ளைகளாக நினைத்து பாதுகாத்து அதற்கு சிறிதளவுகூட தொல்லை கொடுக்காமல் கட்டுப்பாட்டோடு பாதுகாத்து வருகின்றனர். பறவைகள் வரத்து அதிகரித்து வருவதற்கு இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பறவைகளின் ரீங்கார சத்தமே தங்களின் பட்டாசு சத்தம் என்று மனதால் மகிழ்ந்து இந்த பறவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் தியாகம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக தொடங்கி பெய்து வருவதாலும் தொடர்ந்து நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இது பறவைகளுக்கு சாதகமான சூழ்நிலையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான பறவைகள் தேர்த்தங்கல் சரணாலயத்தை நோக்கி வரத்தொடங்கி உள்ளன.
இந்த பறவைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ள இப்பகுதி மக்கள் பறவைகளுக்காக அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வழக்கம்போல் தியாகம் செய்துள்ளனர். பறவைகளின் வருகைக்காகவும், அதன் பாதுகாப்பிற்காகவும் இப்பகுதி மக்கள் தீபாவளி அன்று பறவைகளின் அருமையையும், அதன் பாதுகாப்பையும் உணர்ந்து பட்டாசுகளை வெடிக்காமல் தியாகம் செய்து வருகின்றனர்.
தங்கள் பகுதியை தேடி இனப்பெருக்கத்திற்காக நம்பிக்கையுடன் வரும் பறவைகளுக்கு பட்டாசு வெடி சத்தத்தினால் அச்ச உணர்வு ஏற்பட்டு பயத்தினால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் திரும்பி செல்லக்கூடாது என்பதற்காகவும், பறவைகள் முட்டைகள் அதிக வெடி சத்தத்தினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த தியாகத்தை செய்துவருவதாக தேர்த்தங்கல் கிராம மக்கள் மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
எங்களை தேடிவரும் பறவைகளுக்காக நாங்கள் பல ஆண்டுகளாக பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து வருகிறோம். முன்பெல்லாம் தண்டோரா போட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வந்தோம். இப்போது அனைவருக்குமே இந்த பறவைகள் செல்லப்பிள்ளைகளாகிவிட்டன. கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாததால் மாவட்டத்தில் எங்கும் பறவைகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வராத நிலையில் எங்கள் பகுதியில் மட்டும் சிறிதளவு வந்தன. இதனால் கடந்த ஆண்டு பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சிறியவகை பட்டாசுகளை குழந்தைகள் வெடித்து மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பெரிய அளவிலான அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்காமல் தீபஒளி தரும் பட்டாசுகளை மட்டும் வெடிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், தீபத்திருநாளாம் தீபாவளியை தீபஒளி ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். சுப்ரீம்கோர்ட்டு பட்டாசு வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கி மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதித்துள்ள வேளையில் எந்த சட்டமும் பிறப்பிக்கபடாமல் பறவைகளை நேசிக்கும் எங்கள் கிராம மக்கள் அவைகளுக்காக அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை தியாகம் செய்து வருவது நெஞ்சை நெகிழ செய்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.