கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், நர்சுகளுக்கு கலெக்டர் பாராட்டு
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், நர்சுகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோய் தடுப்பு மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம் உலக தர தின விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல், இணை இயக்குனர் (மருத்துவம்) டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் யோகவதி, மருத்துவ அலுவலர் மீனா, துணை மருத்துவ நிலைய அலுவலர்கள் ரபீக், மிதுன், வித்யாஸ்ரீ மற்றும் செவிலியர்கள், தூய்மைபணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
நாம் ஒவ்வொருவரும் சுகாதாரமான இடத்தில் வசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து, கலப்படமற்ற தரமான உணவு பொருட்களை உட்கொண்டு ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும். இதை நாம் அனைவரும் கடைபிடித்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் நோக்கமே ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வதே. இங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு டாக்டர்களும், நர்சுகளும், தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவரும் இந்த சேவையை இறைவனுக்கு ஆற்றுகின்ற தொண்டாக எண்ணி மிகவும் பெருமிதம் கொள்ள வேண்டும்.
தரமான சிகிச்சை வழங்கப்பட்டதால் தான் இன்று தமிழகத்திலேயே நமது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டை பெற்றது. அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.